Friday, October 23, 2009

உலக சைவ மாநாட்டிற்கு பேரூர்சீர்வளர்சீர் அடிகளாரின் அன்பு அழைப்பு

நலமிகு சிந்தையீர்!

உலக சைவப்பேரவை அமைப்பு தமிழர்கள் சிவநெறியில் சிறக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன்

இலண்டனில் மெய்கண்டார் ஆதீனம் என்ற அமைப்பினால் உருவாக்கப்பெற்றது. இதனை நிறுவியவர் சிவத்திரு. சிவநந்தியடிகள். இவர் ஈழத்துச் சான்றோர். இலண்டனில் பணி செய்தவர். அரிய முயற்சியால் முதன்முதலாகச் சென்னையில் தொடங்கினார். சைவ சித்தாந்தப் பெருமன்றத் துணையுடன் ஒழுகி சைவ அன்பர்களுடன் முதல் மாநாட்டை நடத்தினார்.

தமது இடைவிடா முயற்சியால் இரண்டாவது மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. தமிழகச் சைவ ஆதீனத் தலைவர்களைப் புரவலர்களாக இணைத்து நெறிமுறைகளை வகுத்தார். மீண்டுமொரு மாநாட்டைப் பிரன்சு நாட்டில் பாரிசு நகரத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் துணையுடன் நடத்திச் சிறப்பித்தார். இவரது எண்ணம் திருமுறை, சைவ சித்தாந்தமாகிய திருநெறிய தமிழ்மரபு தழைக்க வேண்டும் என்பதாகும்.

நான்காவது மாநாட்டை நடத்தியபோது முதன்மையாளராகப் பேச அழைத்தார். நமது குறிக்கோளுக்கு உற்ற துணையாகச் செயல்படும் சிவநந்தியடிகள் தமிழ் வழிபாடு பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்களை இயற்றியுள்ளார். நமது வெளியீடாகிய திருநெறிய தமிழில் வாழ்வியல் அருளியல் நூல்களை அவர் பெரிதும் போற்றினார். ஆதலின் இலங்கை மாநாட்டில் திருக்கோயில்களில் தமிழ் வழிபாட்டினால் மக்கள் தெளிவு பெற்று மனம் கசிந்து போற்றுதற்குரியது என்பதை வலியுறுத்திப் பேசினோம். அதனைச் சிவநெறியாளர்கள் பெரிதும் பாராட்டினர்.

ஐந்தாவது மாநாட்டைத் தென்னாப்பிரிக்காவில் நடத்தும் முயற்சியில் நமது ஆதீனத்திற்கு வந்து நமது திருநெறிய தமிழ்த்திருக்குட நீராட்டு, வாழ்வியல் நிகழ்வுகள், திருமணம், புதுமனை புகுவிழா, நீத்தார் நினைவாதியவற்றைத்தெரிந்து இதனை வலியுறுத்தவும் வழிகாட்டவும் மாநாட்டில் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். தம் செலவில் டர்பன் சென்று அங்குள்ள தமிழர்களை இணைத்தார். பல திங்கள் அவர்களுடன் இருந்து மாநாட்டுப் பணிகளை மேற்கொண்டு மாநாட்டினை நடத்தினார். அங்குள்ள சித்தாந்த சபையுடன் எங்களை அழைத்து மூன்று நாட்கள் பல கூட்டங்களில் பங்கு கொள்ளச் செய்தது பாராட்டுதற்குரியது.

ஆறாவது மாநாட்டைத் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடந்த முடிவு செய்யப்பட்டது. மாநாட்டிற்கான திட்டங்களில் பங்கு கொண்டோம். சில சிக்கல்களைத் தவிர்த்து சிறப்பாக நடத்தினோம். ஏழாவது மாநாடு புலம் பெயர்ந்த ஈழத் தமிழறிஞர்கள் பலர் உள்ள கனடா நாட்டில் உள்ள டொரண்டோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. நாட்டன்பர்கள் அழைப்பில் சென்று முதன்மையுரையாற்றி வழிபாடுகளில் பங்குகொண்டு திரும்பினோம்.

எட்டாவது மாநாடு, மொரீசியசில் தமிழறிஞர் சிவத்திரு. புட்பரதம் அவர்கள் ஏற்பாட்டுடன் சிவநந்தியடிகள் சென்றிருந்து அந்நாட்டு ஆட்சித்தலைவர்களையும் அழைத்து மாநாட்டை நடத்தியது சிறந்த சாதனையாகும். சிவத்திரு. புட்பரதம் அவர்களது இடைவிடா முயற்சியால் திருநெறிய தமிழ்வழிபாடு அங்குள்ள திருக்கோயில்களில் இடம் பெற்றது. நமது ஆதீனத் தொடர்பைப் பெரிதும் விரும்பினர். அங்குள்ளவர்களை அழைத்து வந்து பயிற்சியும் வழிபாட்டு நெறியும் பெறச் செய்து புட்பரதம் வழிகாட்டி வருகிறார்.

ஒன்பதாவது மாநாடு மலேசியாவில் சிவத்திரு. திருவாசகம் அவர்கள் ஏற்பாட்டில் நடந்தது. சிவநந்தியடிகள் மறைவினால் நாமே முன்னின்று நடத்தி அவரது அரிய பணிகளைப் பாராட்டினோம்.

பத்தாவது மாநாடு ஆசுத்திரேலியாவில் சிவத்திரு. கணபதிபிள்ளை முதலான அன்பர்கள் முயற்சியால் நடைபெற்றது.

பதினோறாவது மாநாடு சுவிட்சர்லாந்தில் அன்பர்கள் ஏற்பாட்டில் நடந்தது. இம்மாநாட்டுக்கு அன்பர்களின் வேண்டுதலை ஏற்றுச் சென்று முதன்மையுரை வழங்கினோம்.

பன்னிரண்டாவது மாநாட்டைத் தமிழகத்தில் தில்லையில் நடத்த வேண்டுமென்று பலரும் விரும்பினர். சிவத்திரு. பல்குண ராசா பாரிசிலிருந்து வந்து பலருடன் கலந்து பேசினார்.

தில்லையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழிற்கும் சைவத்திற்கும் துணைபுரிவது. ஆதலின் பல்கலைக்கழகத்தில் நடத்துவது சிறப்பெனத் தெரிவித்தோம். சிதம்பரம் மவுனமடம் ஆதீனத் தலைவர் தவத்திரு மௌனசுந்தரமூர்த்தி அடிகளார் தமிழ் அருளாளர். அவரது துணையுடன் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர்களை அன்பர்கள் கண்டு பேசினர். அவர்கள் ஏற்றுள்ளனர்.

இம்மாநாடு திருமுறை, சைவசித்தாந்த நெறிக்கு முதன்மை தரும் முறையில் 5,6,7.2.2010ல் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. திருநெறிய தமிழ் மரபு பேணும் நமது அன்பர்கள் இதில் பங்குகொண்டு உலகத் தமிழறிஞர்களை வரவேற்றுச் சிறப்பிப்பது கடைமையாகும்.

வருக! பணிகளில் பங்கு கொள்க!!

3 comments:

 1. We welcome your great effort to save Tamil,Tamils,Saivam,Culture and traditions!!!
  http://worldtamilhinduforum.blogspot.com
  leader/Drammen Hindu Cultural Centre/Vinayagar Temple, Vårvn-24/s-6,Åssiden,3024 Drammen,Norway
  mobil.0047-91784271

  ReplyDelete
 2. அன்புடையீர்,தங்களது வருகைக்கு நன்றி.உங்களுக்குத் தெரிந்த அன்பர்களுக்கும் இந்த தகவலை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

  ReplyDelete
 3. Thanks for the invitation. Honor to be here.

  ReplyDelete